ரிசர்வ் வங்கி போல் போலி ஆவணம் அனுப்பி ஆன்லைன் கொள்முதலில் மோசடி செய்யும் கும்பல்

கீழக்கரையில் ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்யும்போது மக்களை மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது.

Update: 2020-09-22 22:00 GMT
கீழக்கரை,

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது அனைத்து தரப்பு மக்களிடம் அதிகரித்து வருகிறது.இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் நுகர்வோரை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சித்திக் என்பவருக்கு நிகழ்ந்துள்ளது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்துள்ளார். சில நாட்கள் கழித்து குறிப்பிட்ட எண்ணில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தாங்கள் வாங்கிய பொருட்களுக்காக உங்கள் எண்ணுக்கு கார் ஒன்று பரிசாக விழுந்துள்ளது.

அதனை நீங்கள் பணமாக பெற்றுக்கொள்ளலாம். காரின் மதிப்பு ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம். பணமாக அனுப்ப வேண்டுமானால் உங்கள் வங்கி கணக்கு எண்ணுக்கு தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு ரூ. 28 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை எப்படி நம்புவது பரிசுக்கான ஆவணங்களை அனுப்புங்கள் என்று சித்திக் கேட்டுள்ளார்.

அதன்பின் சிறிது நேரத்திற்கு பிறகு சித்திக் தொலைபேசி எண்ணுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியது போன்ற போலி ஆவணம் ஒன்றை மர்மநபர்கள் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது அது போலி ஆவணம் என தெரியவந்தது. இதற்கிடையே பல முறை போன் செய்து உடனடியாக ரூ. 28 ஆயிரத்து 600 அனுப்புமாறு மர்ம நபர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து சித்திக் மாவட்ட காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்