தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை இன்று தொடங்குகிறது

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று (புதன்கிழமை) விசாரணையை தொடங்குகிறார்கள்.

Update: 2020-09-23 03:30 GMT
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ந் தேதி இவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. வர்த்தக அணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணவேல் உள்பட 2 பேர் சென்னை கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டிஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திசையன்விளை போலீஸ் நிலையத்தில் உள்ள கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விசாரணை அதிகாரி இன்று (புதன்கிழமை) ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர் தனியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்றே விசாரணையை தொடங்க உள்ளனர் என்றும், 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்து இருப்பதாகவும், ஒரு குழுவுக்கு 5 பேர் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்