பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி சத்துணவு ஊழியர் தர்ணா

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி சத்துணவு ஊழியர் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2020-09-23 10:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி சவீதா(வயது 34). நிறைமாத கர்ப்பிணியான இவர், இரூர் அரசுப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் இரூரில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிறுகன்பூர் அரசு நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் கர்ப்பிணியான தனக்கு மீண்டும் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கக்கோரி கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து மனு அளித்திருந்தார். ஆனால், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் விரக்தியடைந்த சவீதா, நேற்று முன்தினம் இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள சென்றார். இதையறிந்த கலெக்டர்அலுவலக ஊழியர்கள் சவீதாவை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறினர். மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், சவீதா நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பணியிட மாறுதல் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சமாதானப்படுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்