குளித்தலை காவிரி நகர் பகுதியில் தரைக்கடைகள் அமைக்க தடை உதவி கலெக்டரிடம் வியாபாரிகள் முறையீடு

குளித்தலை நகர் பகுதியில் தரைக்கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்பவர்கள் நேற்று குளித்தலை உதவி கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

Update: 2020-09-23 11:15 GMT
குளித்தலை,

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட காவிரி நகர் பகுதியில் உள்ள சாலையோரம் தரைக்கடைகள் அமைத்து காய்கறிகள் விற்று பிழைப்பு நடத்தி வந்தோம். ஆனால், காவிரி நகர் பகுதியில் தரைக்கடைகள் அமைக்க கூடாதென நகராட்சி அலுவலர்கள் தெரிவித்ததோடு நேற்று காலை வந்து அனைத்து தரைக்கடைகளையும் எடுக்குமாறு தெரிவித்தனர்.

அதற்கு நாங்கள் இன்று(நேற்று) ஒருநாள் மட்டும் தரைக்கடைகள் அமைத்துக் கொள்வதாகவும், இதுதொடர்பாக உதவி கலெக்டரை சந்தித்து பேசுவதாகவும் தெரிவித்தோம். அதன்படி உதவி கலெக்டரை சந்தித்து பேச வந்துள்ளோம் என்றனர்.

பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமானிடம் இதுதொடர்பாக முறையிட்டனர். வியாபாரிகளின் கோரிக்கையை கேட்டறிந்த உதவி கலெக்டர், கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாலும் காவிரி நகர் பகுதியில் தரைக் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக உழவர் சந்தைக்கு எதிரே உள்ள சாலையிலும், ரெயில் நிலையம் செல்லும் சாலையிலும் தரைக்கடைகள் அமைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதன்பேரில், இன்று (புதன்கிழமை) முதல் உழவர் சந்தை மற்றும் ரெயில் நிலையம் செல்லும் சாலையோரம் தரைக்கடைகள் வைத்து பிழைப்பு நடத்த உள்ளதாக தரைக்கடை வியாபாரிகள் கூறி கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்