சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் சி.பி.ஐ., தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி சிறையில் சி.பி.ஐ., தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2020-09-23 22:30 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி சென்றனர். தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் சாத்தான்குளத்துக்கு சென்று, சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், சம்பவத்தன்று நடந்ததை அவர்களிடம் நடித்து காட்டுமாறு கூறி, அதனை பதிவு செய்தனர். அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று தடயங்களை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள், புதுடெல்லி தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5 மணி அளவில் கோவில்பட்டி கிளை சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடைக்கப்பட்டு இருந்த அறையை பார்வையிட்ட அதிகாரிகள், அங்கு தடயங்கள் சேகரிக்கப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் சிறையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள், சிறை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் சிறை காவலர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர். சுமார் 1½ மணி நேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

தந்தை-மகன் கொலை வழக்கில் இறுதிக்கட்ட விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ. தரப்பில் விரைவில் மதுரை ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்