மேட்டூர் காவிரி ஆற்றில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் - ஆபத்தை உணர்வார்களா?

எச்சரிக்கை அறிவிப்பை மீறி மேட்டூர் காவிரி ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர். விபரீதம் எதுவும் நடைபெறாமல் இருக்க சுற்றுலா பயணிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-09-23 22:30 GMT
மேட்டூர், 

சுற்றுலா தலமான மேட்டூருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம்.

அதே நேரத்தில், மேட்டூர் முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஏராளமான ஆழமான பகுதிகளும் சுழல் போன்ற அமைப்புகளும் உள்ளன. இந்த பகுதியில் குளிக்க சென்ற பலர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

எனவே இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூருக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் ஆர்வ மிகுதியால் இதுபோன்ற ஆபத்தான இடங்களில் இறங்கி குளித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு இளம் ஜோடி தங்கள் கைக்குழந்தையுடன் தடை செய்யப்பட்ட பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தனர். மேலும் தாங்கள் ஆபத்தான இடத்தில் தடையை மீறி குளிக்கிறோம் என்பதை உணராமல் குளிக்கும் போது செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதுபோன்ற ஆபத்தான இடங்களில் குளிப்பதை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் தாங்களாகவே தவிர்ப்பது அவர்களுக்கு பாதுகாப்பானதாகும்.

ஏனெனில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாது என்பதை உணர்ந்து சுற்றுலா பயணிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்