கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் போட்டோ ஸ்டூடியோவுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

Update: 2020-09-23 22:45 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீரராகவர் சாமி நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 36). இவர் காக்களூர்-புட்லூர் செல்லும் சாலையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். மேலும், செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் தொழிலையும் செய்து வருகிறார். இவருக்கு அனிதா (31) என்ற மனைவியும், சமிக்‌ஷா மெர்லின் (8) என்ற மகளும் உள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் 10 ஆண்டுகள் முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் தினேஷ் கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து தினேசை தலை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் மற்றும் பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

அதன் பின்னர், 3 பட்டா கத்தியை கடைக்கு உள்ளேயே வீசிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து உடனடியாக பக்கத்து கடைக்காரர்கள் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்னையா, சித்ராதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சக்திவேல், புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து, கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் ஏ.டி.எம். மையம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலை செய்ய பயன்படுத்திய 3 கத்திகளையும் பறிமுதல் செய்து, குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரை மர்மகும்பல் வெட்டி சாய்த்த சம்பவம் காக்களூர் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த இடத்தில் தினேசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு அவர் உடலை கண்டு கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

மேலும் செய்திகள்