ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்து நெற்பயிர் நாசம் இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை

கொரடாச்சேரி அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்து நெற்பயிர் நாசமானது. இதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-09-24 02:56 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தனசேகரன். இவருக்கு சொந்தமாக கொரடாச்சேரி ஒன்றியம் கீழ எருக்காட்டூர் என்ற இடத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த ஆண்டு 5 ஏக்கர் நிலத்திலும் தனசேகரன் நேரடி தெளிப்பு மூலம் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனசேகரனின் விளை நிலத்தின் கீழாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம், குழாய் பதித்து கச்சா எண்ணெய் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கீழ எருக்காட்டூர் பகுதி முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் கச்சா எண்ணெய் எடுத்து அதனை விளை நிலத்தின் கீழாக அருகில் உள்ள வெள்ளக்குடி கச்சா எண்ணெய் சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தனசேகரனின் வயலில் கச்சா எண்ணெய் பரவி உள்ளது.

நெற்பயிர் நாசம்

கடந்த 2018-ம் ஆண்டு இதேபோல் தனசேகரனின் விளை நிலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவன கச்சா எண்ணெய் குழாய் உடைந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. சேதமடைந்த குழாயை மட்டும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சீரமைத்து தந்தது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கச்சா எண்ணெய் கசிவால் தனது வயலில் இருந்த மண்ணை மாற்றி இந்த ஆண்டு சம்பா சாகுபடியில் விவசாயி தனசேகரன் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டும் முன்பு பாதிக்கப்பட்ட வயலுக்கு அருகில் உள்ள விளை நிலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் அளவிற்கு சம்பா நெற்பயிர் நாசமாகி விட்டது. இதனை கண்டு விவசாயி தனசேகரன் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குழாய் உடைப்பை சரி செய்யும் பணியிலும், வயலில் தேங்கி இருந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதுகுறித்து விவசாயி தனசேகரன் கூறுகையில், ஆண்டுதோறும் இந்த பகுதியில் விதைப்பு நேரத்திலோ அல்லது அறுவடை நேரத்திலோ ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டு எங்களது பயிர்கள் சேதம் அடைவது வழக்கமாகி விட்டது. இதுகுறித்து நாங்கள் பொது இடத்தில் போராட்டம் நடத்தினாலோ அல்லது அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்க சென்றாலோ ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் புகார் கொடுக்க கூடாது என மிரட்டுகிறார்கள். தற்போது பரவியுள்ள கச்சா எண்ணெய்யை அகற்றிவிட்டு எனது வயலில் புதிய மண் மாற்றித்தர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீட்டை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்