படகு போக்குவரத்தை தொடங்க கோரி கன்னியாகுமரியில் வீடு-கடைகளில் தீபம் ஏற்றி போராட்டம்

படகு போக்குவரத்தை தொடங்க கோரி கன்னியாகுமரியில் வீடு, கடைகளில் தீபம் ஏற்றி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-24 05:09 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கினால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சர் வருகையின் போது கன்னியாகுமரியில் உள்ள கடைகள், வீடுகளில் தீபம் ஏற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் முதல்-அமைச்சர் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குமரி மாவட்ட வருகை ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நேற்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கன்னியாகுமரியில் வியாபாரிகள் தங்களது வீடு மற்றும் கடைகளில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அறவழி போராட்டம் நடத்தினர். இதில் திரளான வியாபாரிகள் பங்கேற்றனர்.

தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி பார்க் வியூ பஜாரில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா இயக்குனருமான பி.டி.செல்வகுமார் கடை-கடையாக சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சிவபன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் ஜாண்கிறிஸ்டோபர், அஞ்சுகிராமம் பேரூர் தலைவர் ஜெயக்கொடி, கன்னியாகுமரி பார்க் வியூ பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் மணி, ஒன்றிய அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்