தீபாவளி முன்பணம் வழங்கக்கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

தீபாவளி முன்பணம் வழங்கக்கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-24 16:00 GMT
கடலூர், 

துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2 கோடி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து, கையுறை, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நகராட்சி துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை 11.30 மணி அளவில் கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு துப்புரவு தொழிலாளர் சங்க தலைவர் அரசகுமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஆலோசகர் பக்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை நிர்வாகிகள் நாகப்பன், மணி, ஆனந்த் மற்றும் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் நகராட்சி அலுவலகத்துக்குள் சென்று, அங்கிருந்த மேலாளர் பழனியிடம், தங்களது கோரிக்கைகள் குறித்து முறையிட்டனர். அப்போது அவர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்