கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது

புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.

Update: 2020-09-25 23:23 GMT
புதுச்சேரி,

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 608 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த 73 வயது முதியவர், மணமேடு பெரியார் நகரை சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோரும், ஜிப்மரில் முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த 83 வயது முதியவர், மங்களம் தெற்கு தெருவை சேர்ந்த 47 வயது ஆண், பாக்குமுடையான்பட்டை சேர்ந்த 72 வயது முதியவர் ஆகியோரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கருக்கலாச்சேரியை சேர்ந்த 55 வயது ஆண், ஏனாமில் 45 வயது ஆண் ஆகியோரும் பலியாகி உள்ளனர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 548 பேருக்கு பாதிப்பு இல்லை. 25 ஆயிரத்து 489 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 5 ஆயிரத்து 214 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 1,854 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 360 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 ஆயிரத்து 781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சாவு எண்ணிக்கை 494 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 419 பேர் புதுச்சேரி பகுதியையும், 34 பேர் காரைக்காலையும், 41 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்களாவர். புதுவையில் இறப்பு 1.94 சதவீதமாகவும், குணமடைவது 77.61 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்