திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2020-09-26 00:32 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 64 குழுக்கள் ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 133 பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளான 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது கண்டறியப்பட்டு அப்பகுதிகளுக்கு கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 3 நபர்கள் வீதம் 27 உறுப்பினர்கள் உள்ளனர். தற்காலிக முகாம் அமைக்கப்படும் இடத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதி, மின்வசதி, உணவுப்பொருட்கள் எரிபொருள் போன்ற அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல், முகாமில் தங்க வைக்கப்படும் அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டிய போர்வை, வேட்டி, புடவை, பிரட், பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்கு பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதை உறுதி செய்தல் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை தொடர்பான குழுவில் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். பேரிடர் குறித்து அவ்வப்போது பெரும் தகவல்களை உடனுக்குடன் தொடர்பு அலுவலர்கள், குழுக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவர்களின் பணியாகும்.

மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தங்களது எல்லையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

மேலும் கட்டுப்பாட்டு அறை 044-27664177, 044-27666746-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் வாட்ஸ்-அப் எண்கள் திருவள்ளூர் 9444317862 மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பொன்னேரி 9444317863 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமீதுல்லா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்