கடைவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் டி.ஐ.ஜி. ஆனி விஜயா வியாபாரிகளுக்கு ஆலோசனை

கடைவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று டி.ஐ.ஜி. ஆனி விஜயா வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Update: 2020-09-27 10:42 GMT
பொன்னமராவதி, 

திருச்சி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி.ஆனி விஜயா பொன்னமராவதிக்கு நேற்று வருகை தந்தார். அவர் பொன்னமராவதி போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு பல்வேறு வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர் பொன்னமராவதி போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினார்.

தொடர்ந்து ஆலவயல் மற்றும் பொன்-புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் சிவானந்தம், நிலோபர் ஆகியோருக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்பு பொன்னமராவதி வர்த்தகர் சங்க நிர்வாகிகள், நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

கண்காணிப்பு கேமரா

அப்போது, பொன்னமராவதி அண்ணாசாலை, பொன்-புதுப்பட்டி ஆகிய வீதிகளில் நகைக் கடை வியாபாரிகள், உரிமையாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதை முறையாக பாதுகாக்க வேண்டும்.

காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆய்வின்போது, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், பத்மாவதி, பிரான்சிஸ் மேரி (போக்குவரத்து) மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்