புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2020-09-27 12:02 GMT
திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் 3,600 பக்தர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமைகளான நேற்று மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றி தரிசனம் செய்ய ஏதுவாக கட்டணமில்லா தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்கு பதிவு செய்தவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். கோவிலில் காலை முதலே சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தது.

ஒவ்வொரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கும் சுமார் 600 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, 6 நேரப் பிரிவுகளில் மொத்தம் 3,600 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்

டோக்கன் முறையும் அமல்

ஒவ்வொரு நேரப்பிரிவிலும் 200 டிக்கெட்டுகள் ரூ.250 கட்டண தரிசனத்திற்கும், 200 டிக்கெட்டுகள் ரூ.50 கட்டண தரிசனத்திற்கும், 200 டிக்கெட்டுகள் கட்டணமில்லா இலவச தரிசனத்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் முன்பதிவு செய்யாமல் வந்தவர்களுக்கு அங்கேயே டோக்கன் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

இணையத்தில் டிக்கெட் பதிவு செய்துள்ள பக்தர்கள் தங்களின் தரிசன நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே காத்திருந்தனர். இணையவழி டிக்கெட் வாங்கியவர்களது அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே தரிசனத்திற்கு ரங்கா ரங்கா கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

பா.ஜ.க. மாநில துணை தலைவர்

பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை மற்றும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தனது குடும்பத்துடனும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர்.

இதுபோல ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர். இதுபோல திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரில் உள்ள சீனிவாசபெருமாள் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்