ரெயில் விபத்தில் கைகளை இழந்த மும்பை இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு மூளைச்சாவு அடைந்த சென்னை வாலிபரின் கைகள் பொருத்தப்பட்டன

ரெயில் விபத்தில் 2 கைகளையும் இழந்த மும்பையை சேர்ந்த பெண்ணுக்கு மூளைச்சாவு அடைந்த சென்னை வாலிபரின் கைகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

Update: 2020-09-28 00:15 GMT
மும்பை,

மும்பை குர்லா பகுதியை சேர்ந்த இளம்பெண் மோனிகா மோரே(வயது23). இவர் கடந்த 2014-ம் ஆண்டு காட்கோபர் ரெயில் நிலையத்தில், மின்சார ரெயிலில் ஏற முயன்ற போது தவறிவிழுந்து விபத்தில் சிக்கினார். இந்த துரதிருஷ்ட சம்பவத்தில் அப்போது கல்லூரி மாணவியாக இருந்த மோனிகா 2 கைகளையும் இழந்தார்.

அதன்பிறகு அவருக்கு செயற்கை கைகள் பொருத்தப்பட்டன. ஆனால் செயற்கை கைகளால் அவருக்கு பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. தனக்கான வேலையை செய்ய அவர் மற்றவர்களையே சார்ந்து இருந்தார். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் அவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு கைகளை தானமாக வழங்க யாரும் முன்வரவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தார். அவரது கைகளை மோனிகாவுக்கு தானமாக வழங்க வாலிபரின் குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து வாலிபரின் கைகள் விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டது. பின்னர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மோனிகாவுக்கு வாலிபரின் கைகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். மேலும் அவர் தற்போது கைகளை ஊன்றி படுக்கையில் இருந்து எழுந்திருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஒரு மாதத்திற்கு பிறகு மோனிகா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளார். மோனிகா அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கை விரல்களை அசைக்க முடியும் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

தனக்கு கைகள் கிடைத்தது குறித்து மோனிகா கூறியதாவது:-

நான் இதற்காக 2 ஆண்டுகள் காத்து இருந்தேன். கடைசியில் சென்னையை சேர்ந்த மூளை சாவு அடைந்தவரின் குடும்பத்தினர் கைகளை தானமாக வழங்க தயாராக இருப்பது தெரியவந்தது. கடந்த மாதம் 28-ந் தேதி எனக்கு புதிய கைகள் கிடைத்தன. எனக்கு கைகள் பொருத்தப்பட வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. ஆனால் தற்போது அவர் இல்லை. எனக்கு கைகள் கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்