கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தி வனவிலங்குகள் வேட்டை? போலீசார்- வனத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு

வேப்பந்தட்டை பகுதியில் கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தி வனவிலங்குகள் வேட்டையாடப்படுகிறதா? என்று போலீசார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-28 00:59 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் வெண்பாவூர், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, மலையாளப்பட்டி, பூலாம்பாடி ஆகிய ஊர்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. இந்த காப்பு காடுகளில் மான், காட்டுப்பன்றி, முயல் போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வன விலங்குகளை பலர் அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கிகளை கொண்டு வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் இணைந்து வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அரசலூர், அன்னமங்கலம், மலையாளப்பட்டி, கோரையாறு ஆகிய வனப்பகுதிகளில் கள்ளத்துப்பாக்கி மற்றும் கன்னிவலை போன்றவற்றை பயன்படுத்தி விலங்குகளை யாரேனும் வேட்டையாடுகிறார்களா? என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் யாரும் சிக்கவில்லை.

கடுமையான நடவடிக்கை

இதுதொடர்பாக அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுகையில், வன விலங்குகளை வேட்டையாடுவது மற்றும் அனுமதியில்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பது பெரும் குற்றமாகும். எனவே யாரேனும் வன விலங்குகளை வேட்டையாடினாலோ, கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.

மேலும் செய்திகள்