சமயபுரம் அருகே சாலையின் மையத்தடுப்பில் மோதி கார் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

சமயபுரம் அருகே சாலையின் மைய தடுப்பில் மோதி கவிழ்ந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த 5 பேர் உயிர் தப்பினர்.

Update: 2020-09-28 01:34 GMT
சமயபுரம்,

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 57). கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆர்டர் எடுத்து தேவையான உணவுகளை வினியோகம் செய்வது வழக்கம். இந்தநிலையில் மதுரையில் ஆர்டர் எடுப்பதற்காக நேற்று காலை பாஸ்கர் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

காரில் பாஸ்கருடன், அவருடைய மகன் லாராவின்(30), மேலாளர் அருண்குமார்(38), சமையல்மேலாளர் ராஜேஷ்(35) ஆகியோர் உடன் வந்தனர். காரை டிரைவர் முகேஷ்(24) ஓட்டி வந்தார். கார் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் கைகாட்டி அருகே வந்து கொண்டிருந்தது.

தீப்பிடித்து எரிந்த கார்

அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் மோதிய வேகத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் காரில் பயணம் செய்தவர்கள் “அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என்று அலறினார்கள்.

இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து, காரில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் இதுபற்றி சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இந்த விபத்தில் பாஸ்கர், ராஜேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்