கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி ஒரே நாளில் 66 பேருக்கு தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-09-28 02:56 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு எந்த அளவு உயர்ந்து வருகிறதோ, அதே அளவுக்கு உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் இறந்துள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 60 வயது ஆணுக்கு சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. இதற்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது ஆண் இருமல், மூச்சு திணறல் காரணமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் 43 வயது ஆண். இவரும் சளி, காய்ச்சல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

66 பேருக்கு தொற்று

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிங்காரப்பேட்டை, கொல்லப்பட்டி, காவேரிப்பட்டணம், நெடுங்கல், போச்சம்பள்ளி மத்தூர்பதி, ராயக்கோட்டை, மலையாண்டஅள்ளி, பர்கூர் அரசம்பட்டி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 4 ஆயிரத்து 319 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 431 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள். 828 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 60 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் சிகிச்சை முடிந்து 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்