அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-09-28 04:47 GMT
அருப்புக்கோட்டை,

மதுரையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் அருப்புக்கோட்டை வழியாக சென்று வந்தன. இந்தநிலையில் பஸ் மற்றும் கனரக வாகனங்களின் வரத்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே இதனை தவிர்க்கும் வகையில் மதுரை - தூத்துக்குடி சாலை அமைக்கப்பட்ட பிறகு கனரக வாகனங்கள், தொலை தூர பஸ்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. இதனால் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு ஆகிய பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

புதிய பஸ் நிலையம்

இதையடுத்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்களை அருப்புக்கோட்டை வழியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கோட்ட மேலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாகம் ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகர்புற ஒருங்கிணைந்த மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பில் அருப்புக்கோட்டை காந்திநகர் நான்குவழிச்சாலை அருகே புறநகர் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றது.

அனுமதி கிடைக்கவில்லை

போலீஸ் நிலையம், கழிவறை வசதி, பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் அசோக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ் நிலையம் பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால் பயன்பாட்டுக்கு விட தேசிய நெடுஞ்சாலை துறை அனுமதி கிடைக்கவில்லை. ஆதலால் தான் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்