நடிகை ரியா, சோவிக் போதைப்பொருள் கும்பலில் தீவிரமாக செயல்பட்டனர் ஐகோர்ட்டில் என்.சி.பி. தகவல்

நடிகை ரியா, அவரது தம்பி சோவிக் ஆகியோர் போதைப்பொருள் கும்பலில் தீவிரமாக செயல்பட்டதாக ஐகோர்ட்டில் என்.சி.பி. கூறியுள்ளது.

Update: 2020-09-29 22:00 GMT
மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்.சி.பி.) அவரது காதலி ரியா சக்கரவர்த்தி, தம்பி சோவிக் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்து உள்ளனர். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நடிகை ரியா மற்றும் அவரது தம்பி சோவிக் ஆகியோர் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீவிரமாக செயல்பட்டனர்

வாட்ஸ்அப் உரையாடல்கள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்க் போன்றவற்றில் இருந்து கிடைத்த ஆதாரங்கள் மூலம் அவர்கள் போதைப்பொருளுக்கு பணம் செலுத்தியது தெரியவந்துள்ளது. ரியா போதைப்பொருள் வாங்கியதுடன் அதற்கான பணத்தையும் அளித்து உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர் வீட்டை போதைப்பொருள் வைக்க பயன்படுத்தி உள்ளார்.

சோவிக், ரியா மேல்மட்டத்தை சேர்ந்தவர்கள், போதைப்பொருள் சப்ளையர்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கும்பலில் தீவிரமாக செயல்பட்டது ஆதாரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது. அவர்களை ஜாமீனில் விட்டால் தற்போது முக்கிய கட்டத்தில் உள்ள விசாரணைக்கு தடை ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்