போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேர் கைது மங்களூரு போலீசார் நடவடிக்கை

போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேரை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-09-29 22:12 GMT
மங்களூரு,

கர்நாடகத்தில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கன்னட திரைஉலகில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இந்தி நடிகர் கிஷோர் ஷெட்டி, அக்யுல் நவ்ஷீல் ஆகிய 2 பேரை மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்தி நடிகர் கிஷோர் ஷெட்டியின் தோழியான ஆஸ்கா என்ற இளம்பெண்ணை மணிப்பூரில் வைத்து மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. அவர் கிஷோர் ஷெட்டியுடன் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று போதைப்பொருள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

முக்கிய வியாபாரி சிக்கினார்

மேலும் இந்த விவகாரத்தில் பிரபல கன்னட நடிகை அனுஸ்ரீக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவர் கிஷோர் ஷெட்டியுடன் 10 ஆண்டுகளாக தொடர்பில் இருந்ததும், அவருடன் சேர்ந்து பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக அவரிடமும் மங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில், முக்கிய வியாபாரியான ஷான் நவாஸ் என்பவரை நேற்று முன்தினம் மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் தான் மும்பையில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து மங்களூருவில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் 2 பேர் கைது

இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் நேற்று மேலும் 2 பேரை மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூரு கெங்கேரியை சேர்ந்த ஷாம் என்பதும், மற்றொருவர் நைஜீரியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் மும்பை மற்றும் கோவாவில் இருந்து எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்ட போதைப்பொருட்களை மங்களூருவுக்கு கடத்தி வந்து, கிஷோர் ஷெட்டி மற்றும் நவ்ஷீலிடம் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்