வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் மந்திரி பேச்சு

வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-29 22:44 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், உயர் அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மந்திரி சுதாகர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. மற்ற மாநிலங்களை விட கர்நாடகம் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. ஆனால் சமீபகாலமாக மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் தான் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் நிலையை கண்டு பிரதமர் மோடி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் வைரஸ் பரவல் வேகத்தை 13 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவரது அருகில் உட்கார்ந்திருந்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் தினமும் சராசரியாக 70 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் மற்ற பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா மரண விகிதத்தை 1.4 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளி

ஆலோசனை கூட்டங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுதாகர் பேசினார்.

மேலும் செய்திகள்