விருத்தாசலம் அருகே, மணல் குவாரியை திறக்கக்கோரி அய்யனார் சாமியிடம் மனு கொடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூதன வழிபாடு

விருத்தாசலம் அருகே மணல் குவாரியை திறக்கக்கோரி அய்யனார் சாமியிடம் மனு கொடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-30 02:07 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் மற்றும் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள மணிமுக்தாற்றில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியுடன், மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையத்தின் மூலம் லாரி அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. தொடர்ந்து மணிமுக்தாற்றில் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் அருகே கடந்த மாதம் அரசு மணல் குவாரி தொடங்கியது. இந்த மணல் குவாரி மூலம் லாரிகளில் மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அரசு மணல் குவாரி அமைக்கப்படாததால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மாட்டுவண்டிக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அனைத்து கிராம மாட்டுவண்டி தொழிலாளர்கள் சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் புதுக்கூரைப்பேட்டை அய்யனார் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து அரசு மணல் குவாரியில் மாட்டுவண்டிக்கு மணல் அள்ள அனுமதி வழங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அருள் புரிய வேண்டும் என அய்யனார் சாமியிடம் மனு கொடுத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கோவில் வளாகத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வருகிற 10-ந்தேதி தற்போது செயல்பட்டு வரும் லாரி மணல் குவாரியை கையகப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்