கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெறும் குமாரசாமி நம்பிக்கை

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

Update: 2020-09-30 22:10 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிரா தொகுதியில் நேற்று ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் பகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திடீரென்று வந்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. இதையொட்டி இன்று (அதாவது நேற்று) நமது கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி

இந்த சிரா தொகுதி நமது கட்சி வசம் இருந்தது. இதை நாம் மீண்டும் நம் வசப்படுத்த வேண்டும். அதற்காக நமது கட்சியினர் உழைக்க வேண்டும். நான் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தேன். அப்போது விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தேன். இந்த ஒரு முறை ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்குமாறு மக்களிடம் கேட்டேன். ஆனால் நமது கட்சிக்கு 37 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

இதனால் நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கும் போது, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தேவேகவுடாக்கு போன் செய்து பேசினர். அவர்கள் தங்கள் கட்சி ஆதரவு வழங்குவதாகவும் உங்கள் மகன் முதல்-மந்திரி ஆகட்டும் என்றும் கூறினர். அதற்கு தேவேகவுடா, எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை, உங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆகட்டும் என்று கூறினார்.

இடைத்தேர்தலில் வெற்றி

இதை காங்கிரசார் ஏற்கவில்லை. ஆனால் அவர்களின் விருப்பத்தின் பேரில் நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். முதல்-மந்திரி பதவி மீது எனக்கு ஆசை இருக்கவில்லை. ஆனால் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பதவி ஏற்றேன்.

பிரதமர் மோடி என்னிடம் பேசி பா.ஜனதா ஆதரவு வழங்குவதாகவும், 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருக்க உதவுவதாகவும் கூறினார். ஆனாலும் நான் காங்கிரசின் ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனேன். இந்த சிரா தொகுதியில் நமது கட்சி மீண்டும் வெற்றி பெற வேண்டும். அதேபோல் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நமது கட்சி பலமாக உள்ளது. அங்கு நாம் வெற்றி பெறக்கூடிய சூழல் உள்ளது. அதனால் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெற்றிக்காக தீவிரமாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்