குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

Update: 2020-09-30 23:22 GMT
நெல்லை,

நெல்லை அருகே உள்ள தென்பத்து கிராம பஞ்சாயத்து சொக்கட்டான்தோப்பு கிராம மக்கள், தமிழர் விடுதலைக்களம் கட்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை மனுவை அங்குள்ள புகார் பெட்டியில் போடுமாறு கூறினார்கள். இதையடுத்து அவர்கள் புகார் பெட்டியில் மனுவை போட்டனர்.

நடவடிக்கை

அந்த மனுவில், ‘தாமிரபரணி நதிக்கரையில் உள்ள சொக்கட்டான்தோப்பு கிராமத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக குடிநீர் சீராக வருவதில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் ஊருக்கு குடிநீர் சரிவர கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள சமுதாய கூடத்தை பராமரிப்பு செய்து தரவேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்