தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் 6 நாள் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் 6 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி கோவில்பட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-10-01 00:07 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த வியாபாரி செல்வன் (வயது 32), நிலத்தகராறு காரணமாக காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது திசையன்விளை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அ.தி.மு.க. பிரமுகர் சரண்

இதற்கிடையே, கோர்ட்டில் சரண் அடைந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருமணவேலின் உறவினர்களான முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரும் கைது செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

செல்வன் கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, கொழுந்தட்டு, கடக்குளம், திசையன்விளை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினர். செல்வனின் குடும்பத்தினரிடமும், தட்டார்மடம் போலீசாரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

6 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

தொடர்ந்து சிறையில் உள்ள திருமணவேல், முத்துகிருஷ்ணன், முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். அவர்களிடம் 8 நாட்கள் விசாரிக்க அனுமதிக்க வேண்டி, சி.பி.சி.ஐ.டி. போலீசார், கோவில்பட்டி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சமீபத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது சிறைகளில் இருந்த திருமணவேல், முத்துகிருஷ்ணன், முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், செல்வன் கொலை வழக்கு தொடர்பாக திருமணவேல் உள்ளிட்ட 4 பேரிடமும் 6 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கியும், அவர்களை மீண்டும் வருகிற 6-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து திருமணவேல் உள்ளிட்ட 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்காக தங்களது வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்