ஊதிய உயர்வு வழங்கக்கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-01 22:37 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 அடி ரோட்டில் உள்ள வங்கி முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இதில் சங்க பொதுச்செயலாளர் அய்யனாரப்பன், பொருளாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களின் எதிர்ப்பை பெற்ற பொது மேலாளரை வங்கியை விட்டு வெளியேற்ற வேண்டும். சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுயதொழில் கடன் அரசு ஊழியர்கள் பிணையம் பெற்று மீண்டும் வழங்க வேண்டும். மூடுவிழா காணப்பட்ட ஏ.டி.எம். மையங்களை மீண்டும் திறக்க வேண்டும். நலிந்து வரும் கூட்டுறவு சங்கங்களால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுத்திட நெறிமுறைப்படுத்திட வேண்டும்.

புதிய ஊதிய உயர்வு

வங்கி ஊழியர்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய புதிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். வங்கிகளில் பணியாற்றி இறந்த ஊழியர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்