4 மடங்கு பணம் தருவதாக கூறி மோசடி: மயிலாடுதுறையில், தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது உரிமையாளர்கள் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

4 மடங்கு பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக மயிலாடுதுறையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் உரிமையாளர்கள் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-10-02 04:26 GMT
மயிலாடுதுறை,

திருச்சியை சேர்ந்த எல்பின் நிறுவனத்தினர் பணம் முதலீடு செய்தால் பரிசு பொருட்கள் மற்றும் குறுகிய காலத்தில் 4 மடங்காக பணம் திருப்பி தரப்படும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த அந்த நிறுவனத்தின் ஏஜெண்டு முத்துக்குமார் என்பவர் நல்லத்துக்குடி பகுதியை சேர்ந்த பெண்களிடம் இந்த திட்டம் குறித்து கூறி உள்ளார்.

இதை நம்பி அந்த திட்டத்தில் முதலில் இணைந்த நல்லத்துக்குடியை சேர்ந்த இந்திரா என்பவர் தனக்கு தெரிந்தவர்கள், உறவினர்களிடம் திட்டம் குறித்து விளக்கி உள்ளார்.

திட்டத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலும் 5 நபரை சேர்த்தால் அதற்கு கமிஷன் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை நம்பி நல்லத்துக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வி, இந்திராணி, கோகிலா, பிரியங்கா, ஐஸ்வர்யா உட்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தினர்.

பணத்தை எல்பின் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் திருப்பூரை சேர்ந்த அன்பழகன்(வயது 35) என்பவரிடம் நேரிலும், வங்கி கணக்கு மூலமும் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். மயிலாடுதுறை பகுதியில் மொத்தம் ரூ.20 லட்சத்து 10 ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது. திட்டத்தில் பணம் செலுத்தி சில மாதங்கள் கழிந்த பின்னரும் பரிசு பொருட்கள் மற்றும் கமிஷன் தொகை எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த பலர், அன்பழகனை தொடர்பு கொண்டு கேட்டனர்.

ஊழியர்கள் 2 பேர் கைது; உரிமையாளர்களுக்கு வலைவீச்சு
அதற்கு அவர், கொரோனா ஊரடங்கால் காலதாமதம் ஆவதாக சாக்குப்போக்கு கூறி உள்ளார். இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில் அன்பழகன் நேற்று முன்தினம் நல்லத்துக்குடி பகுதியில் உள்ள ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். இதை அறிந்த பணம் செலுத்தியவர்கள் அவரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து இந்திரா மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஏஜெண்டு முத்துக்குமார், நிறுவன உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ், அன்பழகன், ராமு, ஞானப்பிரகாசம் (46) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் நிறுவன ஊழியர்கள் திருப்பூரை சேர்ந்த அன்பழகன், ஞானப்பிரகாசம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக உரிமையாளர்கள் உள்பட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்