பெங்களூருவில், மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருடன் குமாரசாமி திடீர் சந்திப்பு - மண்டியா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

பெங்களூருவில் நேற்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது மண்டியா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்படி அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2020-10-03 22:15 GMT
பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சமீபத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை குமாரசாமி சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்திற்கு மேலாக 2 பேரும் பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்படி மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரிடம் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதாவது மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா கொல்லரஹட்டி கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தி இருந்தது. ஆனால் அரசு கையகப்படுத்திய நிலத்திற்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து குமாரசாமி பேசியதாக தெரிகிறது.

கொல்லரஹட்டி கிராமத்தை சுற்றியுள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை தொழில் தொடங்குவது உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக அரசு கையகப்படுத்தி இருந்தது. ஆனால் விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்காத காரணத்தினால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கும்படி மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரிடம் குமாரசாமி கோரிக்கை விடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் மாநிலத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பின்பு நீர்ப்பாசன வசதி கொண்ட 700 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. எனவே நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று ஜெகதீஷ் ஷெட்டரிடம் குமாரசாமி வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருடன் நடந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், மண்டியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்