நந்தி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன

விடுமுறை தினம் என்பதால் நேற்று நந்தி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2020-10-04 21:46 GMT
சிக்பள்ளாப்பூர்,

சிக்பள்ளாப்பூர் அருகே உள்ளது நந்திமலை. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான இங்கு வார இறுதிநாட்களில் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வந்து செல்வார்கள். மேலும் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நந்திமலையின் உச்சியில் நின்று கொண்டு கொண்டு சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் நந்திமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இருந்து நந்திமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு, சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று காலை முதலே நந்திமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதனால் அவர்கள் வந்த வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசைக்கு அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் வாகனங்களை எடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் நந்திமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் நந்திமலையில் நின்று இயற்கையை கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்