அரசின் தடை உத்தரவை மீறி சண்டே மார்க்கெட் கடைகள் திறப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புதுவை காந்திவீதியில் செயல்படும் சண்டே மார்க்கெட் திறக்க மாநில அரசு அனுமதி வழங்காமல் இருந்துவந்தது.

Update: 2020-10-04 22:26 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. தற்போது படிப் படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டல்கள், கடைகள், மால்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புதுவை காந்திவீதியில் செயல்படும் சண்டே மார்க்கெட் திறக்க மாநில அரசு அனுமதி வழங்காமல் இருந்துவந்தது. இதனை கண்டித்தும், சண்டே மார்க்கெட் கடைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். சண்டே மார்க்கெட்டை திறந்தால் மக்கள் கூட்டம் அலைமோதும், எனவே கொரோனா மேலும் பரவ வாய்ப்பு உள்ளது என இதுவரை அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை அரசின் தடை உத்தரவை மீறி காந்தி வீதியில் உள்ளூரை சேர்ந்த சண்டே மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை விரித்தனர். மாலையில் அங்கு வந்த மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கிச்சென்றனர். அங்கு பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. எனவே கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்