உ.பி.யில் இளம்பெண்ணை கற்பழித்து கொன்றதை கண்டித்து கோலார் தங்கவயலில் காங்கிரசார் போராட்டம்

உ.பி.யில் இளம்பெண்ணை கற்பழித்து கொன்றதை கண்டித்து கோலார் தங்கவயலில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-05 21:51 GMT
கோலார் தங்கவயல்,

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார். அதை கண்டித்து கோலார் தங்கவயல் நகர காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை ராபர்ட்சன்பேட்டையில் போராட்டம் நடந்தது. கோலார் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் தலைமையில் ராபர்ட்சன்பேட்டை காந்தி சதுக்கத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர காங்கிரஸ் தலைவர் மதலை முத்து, நகரசபை முன்னாள் தலைவர் ரமேஷ்குமார் ஜெயின், தாடி சுரேஷ் குமார், நகராட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் வள்ளல் முனிசாமி, ரமேஷ், ஜெர்மன், கருணாகரன், மாணிக்கம், ஷாலினி நந்தகுமார், சாந்தி முனிசாமி, சாந்தி அன்பு, ஜெயலட்சுமி, இந்திரா காந்தி, தயாசங்கர் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இரவோடு இரவாக...

போராட்டத்தின்போது உத்தரபிரதேச பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், இளம்பெண் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தலித் வன்கொடுமைகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

பெண்களுக்கு, இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. இளம் பெண்ணை கொலை செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. ரவுடிகளுக்கு அதிகாரிகளும், போலீசாரும் துணையாக உள்ளனர். பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்று இருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு முகத்தை கூட காட்டாமல் இரவோடு இரவாக உடலை எரித்து விட்டார்கள். இத்தகைய அரக்கத்தனத்தை கண்டித்து தான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்