வக்பு வாரியம் அமைக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

வக்பு வாரியம் அமைக்கக்கோரி புதுவை சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-05 22:22 GMT
புதுச்சேரி,

புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக வக்பு வாரியம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனை அமைக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சட்டசபை வளாகத்தில் மைய மண்டபத்துக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வக்பு வாரியம் அமைக்கக்கோரும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர் ஷாஜகான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வக்பு வாரியத்துக்கு நிர்வாகிகளை நியமிக்கும் கோப்புகளை முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று தங்களது கோரிக்கை தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர்.

அன்பழகன் எம்.எல்.ஏ.

அதன்பின் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை அரசின் அலட்சியம் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக வக்பு வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகள் செல்வாக்கு மிக்க நபர்களால் கபளீகரம் செய்யப்படுகிறது. ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வக்பு வாரியம் அமைக்கும் பணியை வேறு வழியின்றி அரசு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வக்பு வாரிய வக்கீல் பிரிவு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்வு கடந்த மாதம் நடந்தது. வாரிய உறுப்பினராக எம்.எல்.ஏ. ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.

தற்போது அசனா எம்.எல்.ஏ. மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவராக உள்ளார். அவரை வக்பு வாரிய உறுப்பினராக அங்கீகரித்து அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். வக்கீல் மற்றும் எம்.எல்.ஏ. ஒருவர் என 2 பேர் உள்ள நிலையில் இன்னும் 3 நபர்கள் அதாவது முத்தவல்லி ஒருவர், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த சேவையாளர், முஸ்லிம் சட்ட திட்டங்களை அறிந்த ஒருவர் கொண்ட குழுவினை அமைக்காமல் அந்த சமுதாய மக்களை மனரீதியில் அரசு பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. எனவே உடனடியாக அரசு வக்பு வாரியத்தை அமைக்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்