புதுவையை தமிழகத்தோடு இணைக்க பா.ஜ.க. நடவடிக்கை நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு

புதுவையை தமிழகத்தோடு இணைக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2020-10-05 22:29 GMT
புதுச்சேரி,

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கேட்டு, ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தி மீது அடக்கு முறையை ஏவிய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது. பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

ஊர்வலத்தில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அண்ணா சாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைந்தது.

ஜனநாயகத்தை மதிப்பதில்லை

ஊர்வலத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த மாநில அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றபோது, அவர்களை அந்த மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கீழே பிடித்து தள்ளினர். மேலும் அவரை கைது செய்தனர்.

ஆனால் ராகுல்காந்தி 2 நாட்கள் கழித்து மீண்டும் அங்கு சென்று அந்த பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த தைரியம் யாருக்கு வரும். பா.ஜ.க.வினருக்கு வருமா? சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி காங்கிரஸ்.

இந்த கட்சிக்கு தான் அடித்தட்டு மக்களின் கஷ்டம் தெரியும். மத்திய பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தை மதிப்பது இல்லை. நாட்டு மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை கிடையாது. எதற்கெடுத்தாலும் வருமான வரித்துறையினரை ஏவி மிரட்டுகின்றனர். அவர்களின், இது போன்ற செயல்களை முறியடிக்க காங்கிரஸ் கட்சியால், மதச்சார்பற்ற கூட்டணியால் தான் முடியும்.

தமிழகத்தோடு இணைக்க நடவடிக்கை

நாம் மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் அதனை தடுத்து நிறுத்த மத்திய அரசு ஒருவரை புதுவைக்கு அனுப்பி வைத்துள்ளது. மாநிலத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் வைக்க என்னென்ன செய்ய முடியுமோ அதை கவர்னர் செய்கிறார். அவரது நடவடிக்கையை முறியடித்து கடந்த 4½ ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர், விதவைகள் உதவித் தொகை உள்பட பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறோம்.

மக்களுக்கு இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுத்தால் அதனை தடுத்து நிறுத்துகிறார். புதுவையில் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறோம். இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் நம் கட்சியினரே நம்மை குறை கூறுகின்றனர். இன்னும் 6 மாத காலத்தில் தேர்தல் வர உள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் மதவாத சக்திகளை முறியடிக்க முடியும். புதுவையை தமிழகத்தோடு இணைக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனை முறியடிக்க, பா.ஜ.க.வை புதுவையை விட்டு விரட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்