தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்று 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2020-10-06 00:21 GMT
சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். நிலத்தகராறு காரணமாக செல்வனை கடந்த 17-ந் தேதி ஒரு கும்பல் தட்டார்மடம் அருகே உள்ள கொழுந்தட்டு நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் இருந்து காரில் கடத்தி சென்று தாக்கியது.

பின்னர் அவரை கடக்குளம் காட்டுப்பகுதியில் வீசிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அ.தி.மு.க. பிரமுகர்

இந்த வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். திருமணவேலின் உறவினர்கள் முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும், செல்வன் காரில் கடத்தப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில், தட்டார்மடம் போலீசார், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து கடத்தி சென்ற வாகனத்தை பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தோட்டத்தில் விசாரணை

இந்த நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ள திருமணவேல், முத்துகிருஷ்ணன், முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகிய 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று மாலையில் தூத்துக்குடியில் இருந்து தட்டார்மடத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் என மொத்தம் 30 பேர் 6 குழுக்களாக அங்கு சென்றனர்.

தச்சன்விளை அருகே உள்ள நடுவக்குறிச்சியில் முத்துகிருஷ்ணனுக்கு சொந்தமான வீடு உள்ளது. அங்கு அவரை மட்டும் தனியாக அழைத்து சென்று சுமார் ¾ மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். பூச்சிக்காட்டில் திருமணவேலுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நீண்ட நேரம் நீடித்தது. மேலும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால், அதில் எந்த ஆதாரங்களும் சிக்கவில்லை.

பதிவு செய்தனர்

தொடர்ந்து செல்வன் கடத்தப்பட்ட கொழுந்தட்டு பகுதிக்கும், கொலை செய்து வீசப்பட்ட கடக்குளம் பகுதிக்கும் 4 பேரையும் அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதாவது காரை, செல்வனின் மோட்டார் சைக்கிள் மீது எப்படி மோதவிட்டு கீழே தள்ளினீர்கள், ஓட, ஓட எப்படி விரட்டி சென்று காரில் ஏற்றிச் சென்றீர்கள், கடக்குளம் பகுதியில் அவரது உடலை எப்படி காரில் இருந்து தூக்கி வீசினீர்கள்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் தெரிவித்ததை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் அந்த இடங்களில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். அங்கு இருந்த பொதுமக்களிடமும் தகவல்களை கேட்டு பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் 2 பேருக்கு தொடர்பு

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது, “வியாபாரி கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமணவேல் உள்ளிட்ட 4 பேரும் காவலில் எடுத்துவிசாரிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு 4 பேரையும் அழைத்து சென்று விசாரித்து உள்ளோம். விசாரணையில், இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை தேடி வருகிறோம். 2 பேரையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்