திண்டுக்கல் அருகே, குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கர் நிலத்தை பட்டா போட்ட இன்ஸ்பெக்டர் - மேலும் பலரிடம் மோசடி செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் புகார்

திண்டுக்கல் அருகே, குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கர் நிலத்தை பட்டா போட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மேலும் பலரிடம் மோசடி செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

Update: 2020-10-06 05:51 GMT
திண்டுக்கல்,

கொரோனா ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவர்களுக்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழைய கன்னிவாடியை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்த விவசாயியான ஆரோக்கியம் (வயது 70) மற்றும் விவசாயிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் ஆரோக்கியம் தான் கொண்டு வந்த மனுவை புகார் பெட்டியில் போட்டார். அந்த மனுவில், கசவனம்பட்டி கிராமத்தில் எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு கொடுத்தேன்.

ஆனால் அவர் அந்த நிலத்தை அபகரித்து அவருடைய பெயருக்கு பட்டா போட்டுக்கொண்டார். மேலும் 70 வயதான என்னை மைனர் என்று குறிப்பிட்டு பட்டா மாறுதல் செய்துள்ளார். இதேபோல் எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து ஏக்கர் கணக்கில் நிலத்தை அபகரித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது வாழ்வாதாரம் இழந்துள்ளனர். எனவே நிலத்தை அபகரித்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதோடு எங்களின் நிலங்களையும் மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் புகார் பெட்டியில் ஒரு மனுவை போட்டனர். அதில், உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி இறந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச அரசு ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகள்