தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய சிறப்பு பெண் தாசில்தார் உள்பட 2 பேர் கைது

நில உரிமை பட்டா வழங்க தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய சிறப்பு பெண் தாசில்தார் உள்பட 2 பேரை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.

Update: 2020-10-06 21:37 GMT
பெங்களூரு,

பெங்களூரு வடக்கு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு தாசில்தாராக பணியாற்றியவர் லட்சுமி. அதே அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தவர் பிரசன்னா. இந்த நிலையில் பேகூரை சேர்ந்த தொழில் அதிபரான அசாம் பாஷா என்பவர், தனது நிலத்திற்கு உரிமை பட்டா வழங்க கடந்த சில தினங்களுக்கு முன்பு வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அசாம் பாஷாவின் விண்ணப்ப மனுவை பரிசீலனை செய்த சிறப்பு தாசில்தார் லட்சுமி, ஊழியர் பிரசன்னா ஆகியோர் நிலத்திற்கு உரிமை பட்டா வழங்க ரூ.7 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று அசாம் பாஷாவிடம் கேட்டதாக தெரிகிறது.

அதாவது லட்சுமி ரூ.5 லட்சமும், பிரசன்னா ரூ.2 லட்சமும் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதற்கு முதலில் அசாம் பாஷா ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அசாம் பாஷா, இதுகுறித்து ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்தார்.

கைது

இந்த நிலையில் அசாம் பாஷாவுக்கு சில அறிவுரைகள் கூறிய ஊழல் தடுப்பு படையினர், அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.7 லட்சத்தை கொடுத்து அனுப்பினர். இந்த நிலையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் லட்சுமி, பிரசன்னாவை சந்தித்த அசாம் பாஷா ரூ.7 லட்சத்தை கொடுத்தார். அதை அவர்கள் வாங்கினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் லட்சுமியையும், பிரசன்னாவையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்தையும் ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்து கொண்டனர். கைதான லட்சுமி, பிரசன்னா மீது ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்தனர். லஞ்சம் வாங்கிய சிறப்பு பெண் தாசில்தார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்