எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

நெல்லை மேலப்பாளையம் 29-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, மண்டல அலுவலகத்தில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-10-06 23:26 GMT
நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் 29-வது வார்டில் கரீம்நகர், தய்யூப் நகர், காயிதே மில்லத் நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு சாலை வசதி, கழிவுநீர் செல்ல வழியில்லை. மழைநீர் செல்வதற்கு வாறுகால் இல்லை, மின்கம்பங்கல் மின் விளக்குகள் இல்லை.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குடியேறும் போராட்டம்

இந்த நிலையில் கரீம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் மாநகராட்சியை கண்டித்து மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று நடைபெற்றது.

பாளையங்கோட்டை தொகுதி தலைவர் புகாரி தலைமை தாங்கினார். துணை தலைவர் சலீம்தீன், இணை செயலாளர்கள் மீரான், சிந்தா, பொருளாளர் அப்துல் காதர், செயற்குழு உறுப்பினர்கள் செரீப், காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஹயாத் முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட தலைவர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாய், தலையணையுடன் வந்திருந்தனர்.

பரபரப்பு

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டகள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்