நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 32,445-ஆக உயர்வு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 32,445-ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-10-06 23:52 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒரு சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 54 வயது ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20-ந் தேதி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தொட்டது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 190 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தென்காசியில் குறைந்தது

தென்காசி மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,540- ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 7,098 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 297 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவால் 145 பேர் பலியாகி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மொத்தம் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 789 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 157 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 509 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 123 பேர் இறந்து உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்த்து இதுவரை 32 ஆயிரத்து 445 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்