அந்தியூர்-பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அந்தியூர்-பர்கூர் வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. விலங்குகள் உலாவும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Update: 2020-10-07 00:10 GMT
அந்தியூர்,

அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, குள்ளநரி, தீக்கோழி, காட்டுக்கோழி, கடமான் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

விலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதை தடுப்பதற்காகவும், விலங்குகளின் இனப்பெருக்கும் மற்றும் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகவும் வனத்துறையினர் மரங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தியுள்ளார்கள். இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கக் கூடியவை. மாதம் ஒரு முறை கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வனத்துறையினர் காண்பது வழக்கம்.

கரடி-குள்ளநரி

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 200 தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் பொருத்தியிருந்தனர்.

2 மாதங்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை வனத்துறையினர் பார்த்தனர். அப்போது பல்வேறு விலங்குகள் இரவு நேரங்களில் இரைதேடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. குறிப்பாக சிறுத்தை, கரடி, குள்ளநரி, செந்நாய்கள் அதிக அளவில் பதிவாகியிருந்தன.

எண்ணிக்கை அதிகரிப்பு

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பார்க்கும்போது அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிகிறது. இரவு 10 மணிக்கு மேல் விலங்குகள் இரைதேடி செல்கின்றன. குட்டிகளுடன் கரடிகள் உலாவுகின்றன. சிறுத்தைகளும் பதிவாகியுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாது வனப்பகுதியில் வேட்டையாடும் மர்ம நபர்கள், மரங்களை வெட்டி கடத்துபவர்களையும் பிடிக்க முடிகிறது’ என்றனர்.

மேலும் செய்திகள்