வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

Update: 2020-10-06 22:00 GMT
குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை ஆலந்தூர் முனுசாமி தெருவை சேர்ந்தவர் ரத்னாபாய் (வயது 52). உடல் நலக்குறைவு காரணமாக இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் ரத்னாபாய்க்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கொரோனா தொற்று குணம் அடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்னாபாய் இறந்து விட்டார். இதன்மூலம் குடியாத்தம் தாலுகாவில் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

காட்பாடி வேலாயுத செட்டித்தெருவை சேர்ந்தவர் பாலகோதண்டபாணி. இவருடைய மனைவி லீலாவதி (வயது 68). இவர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 20-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தனர்.

இதேபோல் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட காட்பாடி முத்தமிழ்நகரை சேர்ந்த தாஜ்உன்னிசா (61) கடந்த 2-ந் தேதியும், ஆந்திரமாநிலம் சித்தூர் யோகிமல்லவரத்தை சேர்ந்த சுரேஷ் (42) கடந்த மாதம் 20-ந் தேதியும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரும் நேற்று இறந்து போனார்கள்.

இதுகுறித்து வேலூர், ஆந்திரமாநில சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்கள் முழுபாதுகாப்புடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம் 3 பெண்கள் உள்பட 4 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு நேற்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்