தண்டராம்பட்டு அருகே நடந்த சம்பவத்தில் திருப்பம்: முன்னாள் ஊராட்சி தலைவர் கணவரை காரை ஏற்றி கொன்ற பயங்கரம் - கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்

தண்டராம்பட்டு அருகே விபத்து ஏற்பட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-10-06 22:45 GMT
தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள ராதாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை. இவரது கணவர் ரத்தினவேல், கடந்த மாதம் 28-ந் தேதி இரவு தண்டராம்பட்டு நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து உள்ளனர்

ஆனால் சிகிச்சை பலனின்றி ரத்தினவேல் இறந்து விட்டார். இது குறித்து தண்டராம்பட்டு போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக வழக்குப்பதிவு செய்து அதனை ஓட்டி வந்தவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராதாபுரம் அருகில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 35( மற்றும் திருவண்ணாமலை அருகில் உள்ள அம்மா பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய இருவரும் இந்த விபத்து வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சரணடைந்தனர்.

தகவல் அறிந்த இறந்த ரத்தனவேலன் உறவினர்கள் தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சரணடைந்த வாலிபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட கார்த்தி அளித்த வாக்குமூலத்தில்,“ கடந்த 7 ஆண்டுக்கு முன்பு கார்த்திக்குக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே நிலப் பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையில் அப்போது ஊராட்சி மன்ற தலைவராக இருந்த மணிமேகலை, அவரது கணவர் ரத்தினவேல் ஆகியோர் தலையிட்டு கார்த்திக்கின் எதிரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் சென்னைக்கு சென்று செப்டிக் டேங்க் லாரிகள் வேலை பார்த்து வந்த கார்த்திக் சம்பவத்தன்று தனது பாட்டி உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக ஊருக்கு திரும்பி வந்துள்ளார் பின்னர் நண்பர் மணிகண்டனுடன் சேர்ந்து தண்டராம்பட்டு வண்டி மேடு பகுதியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு காரை ஓட்டி வந்துள்ளார் அப்போது எதிரே வந்த ரத்தினவேல் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர் பின்னர் காரை புதர் மறைவில் மறைத்து வைத்துவிட்டு 2 நாட்கள் தலைமறைவாக இருந்தனர் காரை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளனர் மேற்கண்ட தகவலை கைதுசெய்யப்பட்ட கார்த்திக் கார்த்திக் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர் பின்னர் காரை ஏற்றி கொன்ற வழக்கில் கார்த்திக் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்