காவேரிப்பாக்கம் அருகே, பின்னால் வந்த லாரியில் சிக்கி முதியவர் பலி - நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

காவேரிப்பாக்கம் அருகே பின்னால் வந்த லாரியில் சிக்கி முதியவர் பலியானார். நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-06 21:45 GMT
காவேரிப்பாக்கம்,

வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் வல்லகேட் பகுதி வரை சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று மாலை கான்கிரீட் போடுவதற்காக ஜல்லி ஏற்றி வந்த லாரி திடீரென பின்னால் நோக்கி நகர்ந்தது.

அப்போது பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த சிறுகரும்பூர் ஒத்தவாடை தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 80) லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் விபத்தில் இறந்த சீனிவாசன் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

பின்னர் சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்