மாணவி பாலியல் பலாத்கார வழக்கில்: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு ஜெயில் - வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

திருப்பத்தூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2020-10-07 05:15 GMT
வேலூர், 

திருப்பத்தூர் நகரம் சிவராஜ்பேட்டை கோவிலூர் ரோட்டை சேர்ந்தவர் சிவாஜி என்ற நசீர்அகமது (வயது 55), எலக்ட்ரீசியன். இவருடைய வீட்டில் தாய், தந்தையை இழந்த உறவினரின் 14 வயது மகள் வளர்ந்து வந்தாள். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நசீர்அகமது, மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது. மீறி தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நசீர்அகமதுவை கைது செய்து வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜரானார். நேற்று வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார். மாணவியை பலாத்காரம் செய்த நசீர்அகமதுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டலுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பெண் வன்கொடுமைக்கு 2 ஆண்டுகள் தண்டனை என மொத்தம் 15 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் அதிகபட்ச தண்டனையான 10 ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும். அதையடுத்து போலீசார் நசீர் அகமதுவை வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்