‘தேவேந்திர குல வேளாளர்’ என அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்-ஆர்ப்பாட்டம்

‘தேவேந்திர குல வேளாளர்’ என அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2020-10-07 10:11 GMT
கம்பம்,

காலாடி, பள்ளர் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என பெயர் மாற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும், பட்டியலினத்தவர் பிரிவிலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் புதிய தமிழகம் கட்சியினர், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி தேனி அருகே உள்ள அரண்மனை புதூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி போடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைச்செயலாளர் பாலசுந்தரராஜ், விவசாய அணி செயலாளர் சின்னபாண்டி, தகவல் தொழில்நுட்ப செயலாளர் அசோகன் உள்பட 15 பேரை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கண்டமனூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரதத்துக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகேசன், நிர்வாகி பால்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் வேல்சாமி, பாண்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கம்பத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் தெய்வேந்திரன் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘தேவேந்திர குல வேளாளர்’ என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வீரபாண்டியில் புதிய தமிழகம் கட்சி தேனி ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்