தமிழகத்தில் மருத்துவக்கழிவு விவகாரத்தில் அதிகாரிகள், போலீசார் அலட்சியம் - நீதிபதிகள் பரபரப்பு கருத்து

தமிழகத்தில் மருத்துவக்கழிவு விவகாரத்தில் அதிகாரிகள், போலீசார் அலட்சியமாக நடந்துகொள்வதாக நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்தனர்.

Update: 2020-10-07 13:20 GMT
மதுரை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியைச் சேர்ந்த மணிவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் பகுதியில் உள்ள கரடுகுளம் கண்மாய் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த கண்மாயை நம்பி 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருக்கிறோம். சுற்றுப்பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்கும் இந்த கண்மாயின் தண்ணீரை நம்பி உள்ளோம். இங்கு உள்ள மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகள், மருத்துவ துறையினர் பயன்படுத்தும் ஆடைகள் போன்றவற்றை கண்மாய்க்குள் கொட்டி வருகின்றனர். மேலும் மருத்துவ கழிவு பொருட்களை கண்மாய்க்குள் வைத்து எரிக்கின்றனர். இதனால் எங்கள் கண்மாயில் உள்ள நீர் மாசுபடுவதுடன் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. மேலும் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே இதனை தடுத்து நிறுத்தக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர், மணப்பாறை தாசில்தார், மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கரடுகுளம் கண்மாயில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பிற மாநில எல்லைகளுக்குள் கழிவு பொருட்கள் செல்ல முடியாதவாறு போலீசாரும், அதிகாரிகளும் மக்கள் நலன் கருதி செயல்படுகின்றனர். ஆனால் அங்கிருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்திற்குள் கொண்டு வருகின்றனர். ஆனால், இங்குள்ள போலீசாரும், அதிகாரிகளும் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருக்கின்றனர்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், “மனுதாரர் பகுதியில் உள்ள கண்மாயில் மருத்துவக்கழிவுகளை கொட்டுவதால் தண்ணீரில் கழிவுகள் கலந்து மக்களின் நலன் பாதிக்கப்படும். எனவே மருத்துவக்கழிவுகளை அகற்ற உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உரிய பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கில் சுகாதாரத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்த துறையினரும் உரிய பதில் அளிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை நவம்பர் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்