உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம்: பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜனதா அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-07 15:11 GMT
நாமக்கல்,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி எம்.பி., பிரியங்கா காந்தி ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது அங்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், நகர தலைவர் ராம்குமார் உள்பட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே போராட்டம் நடந்தது. இதில் உத்தரபிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதற்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், நகர தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, கபிலர்மலை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் நடராஜன், மாவட்ட பொறுப்பாளர் அவிநாசிலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் நந்தகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட தலைவர் பிடி.தனகோபால் தலைமை தாங்கினார். நகர தலைவர் சர்வேயர் செல்வகுமார் வரவேற்றார். கட்சியின் ஒருங்கிணந்த நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவர்கள் டாக்டர் செழியன், பேங்க் சுப்பிரமணி, வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இதில் காங்கிரஸ் செயல்தலைவர் ரங்கராஜன் குமாரமங்கலம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

அப்போது காங்கிரசார் உத்தரபிரதேச சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பா.ஜனதா துணைபோவதாக கூறி, பா.ஜனதா கட்சி கொடியை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு வட்டார தலைவர் ராஜாமணி, பள்ளிபாளையம் வட்டார தலைவர் ஜலீல், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஸ்தனகோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்