முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்-அமைச்சர் வேட்பாளராக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி புதுவை அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2020-10-07 22:41 GMT
புதுச்சேரி,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து அறிவிக்கப்படும் என்று அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்று புதுவையிலும், தமிழகத்திலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமைக் கழகத்தில் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. உத்தரவின்பேரில் பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்தநிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், மாநில அ.தி.மு.க. துணை செயலாளர்கள் நாகமணி, பன்னீர்செல்வி, உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முத்தியால்பேட்டை

அதேபோல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் கொண்டாடுமாறு அ.தி.மு.க.வினரை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். அதன்பேரில் காந்தி வீதி மணிக் கூண்டு அருகே அ.தி.மு.க. வினர் திரண்டு வந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மேலும் செய்திகள்