அமைச்சராக இருந்து எதுவும் செய்ய முடியாததற்கு வருந்துகிறேன் அமைச்சர் கந்தசாமி விரக்தி

அமைச்சராக இருந்து எதுவும் செய்ய முடியாததற்கு வருந்துகிறேன் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2020-10-07 22:43 GMT
பாகூர்,

ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் புதுச்சேரி அரசு மாவட்ட தொழில் மையம் சார்பில் சுய வேலைவாய்ப்பு-தொழில் முனைவோர் பயிற்சி சம்பந்தமான திறன் மேம்பாட்டு முகாம் நேற்று நடந்தது. முகாமை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு சுய தொழில் தொடங்குவதற்கான சலுகைகள், பயிற்சி, வங்கி கடன், மானியங்கள் பெறுவது குறித்து பேசினார். அதனைதொடர்ந்து சுயதொழில் தொடங்குவதற்கு விண்ணப்பங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

முகாமில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுச்சேரி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொடுத்தால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அதை கவர்னரும், உயர் அதிகாரிகளும் நிறுத்தி விடுகின்றனர். எனவே சுயதொழில் தொடங்கி நீங்களே முதலாளியாக மாற அரசு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை பயன்படுத்தி மானியத்துடன் கூடிய கடன் பெற்று தொழில் தொடங்க முன்வரவேண்டும்.

கடவுள் தண்டிப்பார்

அங்கன்வாடி மையங்களில் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதை அறிந்த கவர்னர் கிரண்பெடி, அதிகாரிகள் அந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தி விட்டார்கள். மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேறு மாநிலத்தில் கூட நமது ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்கலாம்.

ஆனால் மத்திய அரசின் திட்டத்திற்கு முரண்பாடாக புதுச்சேரியில் எந்த பொருளும் வழங்கப்படாமல் கவர்னர் கிரண்பெடி ரேஷன் கடையை மூடச்செய்து விட்டார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் களை கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். அரசு சார்பு நிறுவனங்களில் வேலை இழந்தவர்கள் என்னை கோபமாக பார்க்கிறார்கள். மற்றொரு புறம் வேலை கிடைக்கவில்லை என்று பேசுகிறார்கள். இதனால் ஒரு அமைச்சராக இருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதை எண்ணி வருந்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்