‘ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்களை கடைக்காரர்கள் தவிர்க்க வேண்டும்’ கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்

‘ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்களை கடைக்காரர்கள் தவிர்க்க வேண்டும்‘ என்று கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2020-10-07 23:42 GMT
நெல்லை,

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரநிர்ணய அமைவனம் சார்பில் ‘சரியான உணவினை உண்போம்‘ என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக நாடு முழுவதும் 150 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் நெல்லை மாவட்டமும் ஒன்றாகும்.

இதன் தொடக்க விழா நெல்லை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மருந்தியல் துறை கூட்டரங்கில் நேற்று காலை நடந்தது. உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் வரவேற்று பேசினார். பரிக்‌ஷன் நிறுவன இயக்குனர் பிரவீன் ஆண்ட்ரூஸ் திட்டம் குறித்து விளக்கி பேசினார். நெல்லை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு, திட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதற்கான விளம்பர பதாகைகளையும் அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தவிர்க்க வேண்டும்

நாம் உண்ணும் உணவு சத்தாகவும், சரிவிகிதத்தில் செறிவூட்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவு கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவுதான் நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது.

கடைகளில் உணவு தயாரிக்க பயன்படும் சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கும் போது பல நோய்கள் உருவாகின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதை கடைக்காரர்கள் தவிர்க்க வேண்டும். நல்ல உணவு கிடைக்கும் என்று நம்மை நாடி வரும் பொதுமக்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும் என்று உணவு விற்பனையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி முகாம்

தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. அதை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார். அவர் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச சீருடையை வழங்கினார். விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற உணவு பாதுகாப்பு உரிமம் பதிவுச் சான்று உடனடியாக வழங்கும் முகாமையும் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் நெல்லை மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாந்தா ராமன், பரிக்‌ஷன் நிறுவன மேலாண் இயக்குனர் சரண்யா காயத்ரி, ஜோஸ்கோ டிஜிட்டல் விளம்பர நிறுவன இயக்குனர்கள் டாக்டர் சார்லஸ், ஜாஸ்மின், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்